இருப்பது 19 வகுப்பறைகள்...! படிப்பதோ 1,100 மாணவர்கள்...!


இருப்பது 19 வகுப்பறைகள்...! படிப்பதோ 1,100 மாணவர்கள்...!
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:16:22+05:30)

மூங்கில்துறைப்பட்டு அரசு பள்ளியில் போதுமான வகுப்பறை கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் மைதானத்தில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 1100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியில் போதுமான அளவு வகுப்பறை கட்டிட வசதிகள் இல்லை.

இது குறித்து புகார் அளித்தும் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு வழியி்ன்றி மாணவர்களை பள்ளி வளாகத்தில் உள்ள வெட்ட வெளியில் அமர வைத்து ஆசிரியர்கள் கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் கவனம் சிதறுவதால், அவர்கள் சரியான முறையில் கல்வி கற்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி கற்றுக்கொடுக்க முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

இதனிடையே மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் வகையில், மேல்நிலைப்பள்ளியை பிரித்து பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இட நெருக்கடி

இதனால் மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிட வசதி கிடைக்கும் என்பதால் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்க வில்லை. பெண்கள் உயர் நிலைப்பள்ளி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்போடு நின்று விட்டது. இதனால் கடு்ம் இடநெருக்கடிக்கு மத்தியில் மாணவ-மாணவிகள் தற்போதும் பாடம் கற்று வருகின்றனர். இதை தவிர்க்க பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாழடைந்த வகுப்பறை கட்டிடம்

இது குறித்து மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்த சேகர் கூறுகையில், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப 27 வகுப்பறை கட்டிடங்கள் இருக்க வேண்டும். ஆனால் இங்கு 19 வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள வெட்ட வெளியில் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர். மேலும் ஒரே வகுப்பறை கட்டிடத்தில் அளவுக்கு அதிகமாக சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களை அமர வைத்து பாடம் சொல்லி கொடுக்கின்றனர். இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மாணவர்களை சரியான முறையில் கண்காணிக்க முடியாமல் ஆசிரியர்களும் தவித்து வருகின்றனர். இது தவிர பள்ளியில் 10 வகுப்பறை கட்டிடங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இந்த வகுப்பறை கட்டிடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பயன்பாடின்றி பாழடைந்து உள்ள இந்த கட்டிடங்கள் அருகில் தான் மாணவர்கள் விளையாடி வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன்பு அந்த கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சிறந்த எதிர்காலம்

மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த தர்பார்கூறுகையில், மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொடுப்பது கல்வி மட்டுமே. அந்த கல்வியை வழங்கும் கல்விக்கூடம் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் மூங்கில்துறைப்பட்டில் உள்ள அரசு பள்ளி அதுபோன்று சிறப்பாக இல்லை. போதுமான அளவுக்கு வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாததால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.

.கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் மூங்கில்துறைப்பட்டு இருப்பதால் இங்குள்ள பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வருதில்லை என நாங்கள் நினைக்கிறோம். அதிகாரிகளின் அலட்சியத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதை தவிர்க்க பள்ளியில் போதுமான அளவுக்கு வகுப்பறை கட்டிட வசதி மற்றும் கழிப்பறை வசதியை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.Next Story