டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது பராமரிப்பின்றி காணப்படும் பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரி


டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது பராமரிப்பின்றி காணப்படும் பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரி
x

பள்ளிப்பட்டு வட்ட அரசு ஆஸ்பத்திரியில் வசதிகள் செய்து தரப்படாமல் பராமரிப்பின்றி காணப்படுகிறது. டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கோனேட்டம்பேட்டை கிராமத்தில் வட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது. பள்ளிப்பட்டு மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியை சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்கள் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இந்த வட்ட அரசு ஆஸ்பத்திரியில் சுற்றுப்புறச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் விஷ பூச்சிகள் இரவு நேரங்களில் மிக சுலபமாக அரசு ஆஸ்பத்திரியில் நுழைகின்றன. இந்த இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் இதுநாள் வரை கட்டப்படாததால் அருகில் உள்ள கிராமப்புறத்தை சேர்ந்த விவசாயிகள் ஆஸ்பத்திரி இடத்தில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இது ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு இடையூறாக இருப்பதுடன் ஆஸ்பத்திரி பகுதியும் அசுத்தமாக மாறுவதற்கு வழி வகுக்கிறது.

மேலும் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டர், ஸ்கேன், இ.சி.ஜி., எக்ஸ்ரே ஆகியவற்றை இயக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. பரிசோதனை கூடத்திலும் பரிசோதனை செய்ய ஊழியர்கள் இல்லாததால் அந்த பணியிடமும் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நோயாளிகள் திருத்தணி அல்லது திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மகப்பேறு மருத்துவர் உள்பட டாக்டர்கள் பற்றாக்குறையும் இந்த ஆஸ்பத்திரியில் நிலவி வருகிறது. இந்த தாலுகா அரசு ஆஸ்பத்திரி பிணவறை கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

பள்ளிப்பட்டு பகுதியில் மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பிண பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இப்பகுதியில் விபத்துகளில் இறக்க நேரிடுபவர்களையும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இறந்தவர்களையும் பிணப்பரிசோதனை செய்ய இங்கே மருத்துவர்களும் இல்லை. அந்தக் கட்டிடமும் சரிவர இல்லாததால் பிண பரிசோதனை சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் செய்ய வேண்டி உள்ளது.

எனவே திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிப்பட்டு வட்ட அரசு ஆஸ்பத்திரியின் தேவைகளை தீர்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story