கே.கே.நகரில் நள்ளிரவில் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு


கே.கே.நகரில் நள்ளிரவில் மரத்தில் ஏறி  தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு
x

மதுரை கே.கே.நகரில் நள்ளிரவில் மரத்தில் ஏறிய நபர் கீழே குதித்து விடுவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் லாவகமாக செயல்பட்டு அந்த நபரை கீழே இறக்கினர்.

மதுரை


மரத்தில் ஏறிய நபர்

மதுரை கே.கே. நகர் முக்கிய பிரமுகர் மற்றும் அரசு அதிகாரிகள் அதிகம் பேர் வசிக்கும் பகுதியாகும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அங்குள்ள ஒரு மரத்தில் மர்மநபர் ஒருவர் ஒளிந்திருப்பதை அந்த பகுதி மக்கள் கண்டனர். அவரை மரத்தில் இருந்து இறங்குமாறு கூறியும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் அவர் மரத்தில் யாராவது ஏறினால் கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்து அதே பகுதியை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு துறையினரும், அண்ணாநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்ட மர்ம நபர் தன்னை பிடிக்க வந்தால் கீழே குதித்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இவ்வாறு நேற்று காலை 7 மணி வரை சென்றது.

மனநோயாளி

அதன்பின்னர் தீயணைப்புத்துறையினர் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து மரத்தின் மீது லாவகமாக ஏறி, மர்ம நபரின் இடுப்பில் கயிறு கட்டி மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் புதூரை சேர்ந்த ஜெயக்கொடி என்பது தெரியவந்தது. மேலும் அவர் எதற்காக இரவு நேரத்தில் மரத்தில் ஏறினார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது உறவினர்களை போலீசார் அழைத்து விசாரித்தனர். அதில் அவர் குடிக்கு அடிமையாகி மனநோயாளியாக சுற்றித்திரிவது தெரியவந்தது. ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story