அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டவர்களுடன் இனி இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை-எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டவர்களுடன் இனி இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எடப்பாடி:
பேட்டி
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து மாலையில் எடப்பாடி நெடுஞ்சாலை துறை பயணிகள் சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை
அப்போது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட பா.ஜனதாவிற்கு உரிமை உள்ளது" என்ற முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் கருத்து குறித்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கூறும் போது, 'இது கட்சி மீது விசுவாசம் இல்லாத தன்மையை காட்டுகிறது. அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள், எந்த காலகட்டத்திலும் கட்சியின் உள்விவகாரங்களில், வேறொரு நபர் தலையிடுவதை ஏற்க மாட்டார்கள். இதுபோல் கட்சிக்கு விசுவாசம் இல்லாமலும், பிறர் தூண்டுதலின் பேரில் கட்சியை உடைக்க நினைக்கும் நபர்களுக்கு இனி எந்த காலத்திலும் கட்சியில் இடம் இல்லை. அவர்களுடன் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என இதன் மூலமாக திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்' என்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
சமீபத்தில் திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தினால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது போன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
திட்டங்களை முடக்குகிறது
விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமலும், வடிகால் வசதிகள் சரி செய்யப்படாமலும், ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் நிறைவடையாமலும் உள்ளது. இது தமிழக அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது.
இதனால் அடுத்து வரும் மழைக்காலங்களில் சென்னை பல்வேறு வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட குடி மராமத்து பணிக்கு, தற்போதைய தமிழக அரசு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. அது மிகவும் ஒரு சிறந்த திட்டமாகும். இதுபோன்ற நல்ல பல திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி வருகிறது.
அமைச்சர்களுக்கு கண்டனம்
சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. அமைச்சர் பெண்களின் இலவச பஸ் பயணத்தை இழிவுபடுத்தி பேசி உள்ளார். இதுபோல் தி.மு.க.வை சேர்ந்த பல அமைச்சர்கள் பொது வெளிகளில் பொதுமக்களை இழிவாக பேசி வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
விரைவில் அ.தி.மு.க. தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வரஉள்ளது அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டியும், காவிரியில் மாசு கலப்பதை தடுத்திடும் நோக்கில் "நடந்தாய் வாழி காவேரி" திட்டத்தை செயல்படுத்த கோரியும், டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளேன். தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கேடான நிலையில் இருப்பதனையும், மாநில முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதையும் அவரிடம் சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கவுன்சிலர் இணைந்தார்
தொடர்ந்து எடப்பாடி நகராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் ரவி தலைமையில் மாற்றுக்கட்சியினர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, சந்திரசேகரன் எம்.பி., அ.தி.மு.க. நகர செயலாளர் ஏ.எம்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ், மாதேஸ்வரன், ராஜேந்திரன், நகராட்சி முன்னாள் தலைவர் டி.கதிரேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.