மனித உரிமை மீறல் சம்பவங்களில் சமரசம் கிடையாது கைதிகளின் பற்களை உடைத்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை


மனித உரிமை மீறல் சம்பவங்களில் சமரசம் கிடையாது கைதிகளின் பற்களை உடைத்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை
x

கைதிகளின் பற்களை உடைத்த அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் வியாசை இளங்கோ கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.

அப்போது அவர், 'தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. போலீசார் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை' என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து கைதிகளின் பற்களை உடைத்த அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கை பணியில் இருந்து நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர் இசக்கி சுப்பையா, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், பா.ம.க. உறுப்பினர் அருள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் முகமது ஷாநவாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் நாகை மாலி, தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பாக கொண்டு வந்து பேசினார்கள்.

பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:-

அ.தி.மு.க. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் என்ற வியாசை இளங்கோ நேற்று முன்தினம் (27-ந் தேதி) 5 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். அவரது மனைவி சுமலதா கொடுத்த புகாரின் அடிப்படையில், செம்பியம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், கொலையுண்ட இளங்கோ 2 ஆண்டுகளுக்கு முன்பு, சஞ்சய் என்பவரை பொது வெளியில் வைத்து தாக்கியதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக சஞ்சய் இந்த கொலை திட்டத்தை தீட்டியுள்ளதும் தெரிய வந்தது. போலீசார் இரவோடு இரவாக 2 மணி நேரத்தில், வழக்கில் தொடர்புடைய சஞ்சய், கணேசன், கவுதம், வெங்கடேசன், அருண்குமார் ஆகிய 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் இளஞ்சிறார் குற்றவாளி.

மேலும், கொலை செய்யப்பட்ட இளங்கோ, போதை பொருளுக்கு எதிராக இருந்ததாக சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரையில் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்த புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவகாரத்தை பொறுத்தமட்டில், குற்றச்செயலில் ஈடுபட்டு, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன், சேரன்மாதேவி சார்-ஆட்சியர் உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. அந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.

போலீஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன்.

மேலும், முழுமையான விசாரணை அறிக்கை வரப்பெற்றவுடன், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவையெல்லாமே சம்பவம் நடைபெற்ற உடனேயே இந்த அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் ஆகும்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், சாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 1,670 கொலைச்சம்பவங்கள் நடைபெற்றன. தி.மு.க. ஆட்சியில், அதாவது, 2022-ம் ஆண்டு அது 1,596 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 74 கொலைகள் இந்த ஆட்சியில்தான் குறைக்கப்பட்டுள்ளன என்று சொல்வதை விட அது தடுக்கப்பட்டிருக்கிறது.

நமது ஆட்சியைப் பொறுத்தவரை, போலீஸ்துறை சுதந்திரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு, கொலையாளிகள் யாராக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அதில் எந்தவிதமான பாரபட்சமோ, அரசியலோ எதுவும் பார்க்காமல், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story