இங்கே காதல் இல்லை...இனி இருந்தாலும் நிம்மதி இல்லை... விரும்பிய பெண் கிடைக்காததால் மாயமான வாலிபர்


இங்கே காதல் இல்லை...இனி இருந்தாலும் நிம்மதி இல்லை... விரும்பிய பெண் கிடைக்காததால் மாயமான வாலிபர்
x

விரும்பிய பெண் கிடைக்காததால் வாலிபர் மாயமான சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை,

கோவை பீளமேடு அருகே மயூரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் ரமேஷ் (41) என்பவர் அதே கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அந்த வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் விற்பனை பிரதியாக பணியாற்றினாலும் அவரது கற்பனை எல்லாம் அந்த பெண்ணை சுற்றியே வந்தது. திருமணம் என்று ஒன்று நடந்தால் அந்த பெண்ணோடுதான்...இல்லையேல் மண்ணோடுதான் என்று வாலிபர் சபதம் பூண்டார்.

இருப்பினும் வாலிபரை அந்த பெண் காதலிக்கவில்லை. இருந்தாலும் வாலிபரால் அந்த பெண்ணை மறக்க முடியவில்லை. இதனால் வாலிபர் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டார். நினைத்த பெண் கிடைக்கவில்லையே....என்று நிலை குலைந்து நிம்மதியை தொலைத்தார்.

சம்பவத்தன்று அந்த வாலிபர், தனது உறவினர் ஒருவரை தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் செல்போனில், எனது காதல் கை கூடாத காரணத்தால் நான் சாகப் போகிறேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். உடனே அந்த உறவினர் பதறி அடித்து, இவரது மாமா ரமேஷிடம் தகவல் தெரிவித்தார். உடனே ரமேஷ், அந்த வாலிபரை பலமுறை செல்போனில் அழைத்த போதும், அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்காத காரணத்தால், பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் காதலிக்கும் அந்தப் பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? காணாமல் போன வாலிபர் அந்த பெண்ணை தேடித்தான் சென்றாரா? அல்லது காதல் கைகூடாததால் தற்கொலைக்கு துணிந்து சென்று விட்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இங்கே காதல் இல்லை...இனி இருந்தாலும் எங்கேயும் நிம்மதி இல்லை...என்பது போல், விரும்பிய பெண் கிடைக்காததால், செல்போனில் விபரீதமாய் பேசி விடைபெற்ற, மாயமான வாலிபரின் செயல் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story