பழனி கோவிலில் யாருக்கும் சிறப்பு மரியாதை கிடையாது- மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
பழனி கோவிலில் யாருக்கும் சிறப்பு மரியாதை கிடையாது என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தெரிவித்தது
பழனியை சேர்ந்த சிவானந்தா புலிப்பாணி பாத்திரசுவாமி தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவின் போது, கோவில் நிர்வாகம் தரப்பில் மரியாதையோடு அழைக்கப்பட்டு சாமி தரிசனம் செய்யப்படும். கடந்த ஆண்டு வரை புலிப்பாணி கரூர் வழி வாரிசுகளுக்கு தண்டாயுதபாணி கோவில் சார்பாக நவராத்திரி விழா அன்று மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆகவே இந்த வருடம் அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ள நவராத்திரி விழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பாக மரியாதை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, "பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பாக யாருக்கும் சிறப்பு முதல் மரியாதை வழங்கப்படாது, பொதுவாக கட்டளைதாரர்களுக்கு என்ன மரியாதை வழங்கப்படுமோ, அது மட்டுமே மனுதாரருக்கு வழங்கப்படும்" என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.