பெருஞ்சாணி அணையில் 5 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு
குமரியை ஏமாற்றும் தென்மேற்கு பருவமழையால் பெருஞ்சாணி அணையில் 5 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குலசேகரம்,
குமரியை ஏமாற்றும் தென்மேற்கு பருவமழையால் பெருஞ்சாணி அணையில் 5 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏமாற்றும் பருவ மழை
குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தீவிரமாக பெய்யும். ஆனால் நடப்பாண்டில் ஜூன் மாதம் நிறைவடைந்த பின்னரும் தென்மேற்கு பருவ மழை பெய்ய வில்லை. கடந்த மாதம் குமரி மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையில் 15 சதவீதம் அளவுக்கு மட்டுமே மழை பெய்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஜூன் 1-ந் தேதி வழக்கம் போல் பேச்சிப்பாறை அணை மற்றும் பெருஞ்சாணி அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சிற்றாறு அணைகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 700 கன அடிக்கு அதிகமாகவும், பெருஞ்சாணி அணையிலிருந்து வினாடிக்கு 50 முதல் 150 கன அடி வரையிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர் இருப்பு
இந்நிலையில் மழை பெய்யாததால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் 18.75அடியாக குறைந்தது. மேலும் அணையின் நீர் இருப்பு 144.75 மில்லியன் கன அடியாக சரிந்து காணப்பட்டது. இந்த அணையின் மொத்த கொள்ளவு நீர் இருப்பு அளவு 2890 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், தற்போதைய நீர் இருப்பு அளவான 144.75 மில்லியன் கன அடி என்பது வெறும் 5 சதவீத அளவாகும். அணைக்கு உள்வரத்து இல்லாத பட்சத்தில் அணையில் இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் ஓரிரு நாட்கள் தான் பாசனத்திற்கு திறந்து விடமுடியும்.
பேச்சிப்பாறை அணையில்...
அதே சமயத்தில் பேச்சிப்பாறை அணை தண்ணீரை நம்பிய நிலையில் தான் இந்த பருவத்திற்கான பாசனம் அமைந்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் தற்போது நீர்மட்டம் 35.71 அடியாக உள்ளது. அணையில் 61 சதவீத அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 721 கன அடி தண்ணீர் பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணையின் பாசனக் கால்வாயில் 1000 கன அடி வரை தண்ணீர் விடலாம் என்ற நிலையில், பாசனக் கால்வாயில் முழுமையாக தூர் வாரப்படாத நிலையில், கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
மழை மட்டுமே தீர்வு
இதற்கிடையேமாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் எக்டருக்கு மேல் நெல் நடவு பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் மழை பெய்தால் மட்டுமே பயிர்களை முழுமையாக காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து முன்னோடி விவசாயி செண்பகசேகரன் பிள்ளை கூறியதாவது:-
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை பெய்யாமல் உள்ளது. மேலும் பெருஞ்சாணி அணை வறண்ட நிலையை சென்றடைய உள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து முழு அளவில் தண்ணீர் எடுக்கலாம் என்றால் கால்வாய் தூர் வாரப்படாத நிலையில் அதற்கும் வாய்ப்புகள் இல்லாத நிலை உள்ளது. நெல் நடவு செய்யப்பட்ட பல பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலையும் காணப்படுகிறது. குளங்களிலும் முழுமையான அளவுக்கு தண்ணீர் இல்லாமல் காட்சி அளிக்கிறது. பாசன மேலாண்மையில் பொதுப்பணித்துறை மெத்தனமாக செயல்படக்கூடாது. மழைக்காக பிரார்த்தனை செய்து வருகிறோம் என்றார்.
அதிகாரி சொல்வது என்ன?
பொதுப்பணித்துறை தரப்பில் அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை உள்பட 4 பிரதான அணைகளில் தற்போது 40 சதவீத அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அதே வேளையில் பெருஞ்சாணி அணை வறண்ட நிலைக்கு சென்றுள்ளது. ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழையில் 15 சதவீதம் அளவுக்கு மட்டுமே மழை பெய்துள்ளது. எனினும் அணையில் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி பாசனத்திற்கு தட்டுப்பாடில்லாமல் தண்ணீரை கொடுக்க முயற்சித்து வருகிறோம். ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மழை இயல்பான அளவுக்கு பெய்தால் பயிர்களை முழுமையாக காப்பாற்றி விடலாம். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.