பேரணியாக சென்ற பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


பேரணியாக சென்ற பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

திண்டிவனத்தில் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரம்மதேசத்தில் பா.ம.க.வினர் 20 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

விழுப்புரம்

பிரம்மதேசம்

பேரணி

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் பிறந்தநாள் விழா இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அக்கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பா.ம.க.வின் கொள்கையை விளக்கும் வகையிலும், கட்சியினரை ஒருங்கிணைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் இருசக்கர வானங்களில் கட்சி கொடியை கட்டிக்கொண்டு மரக்காணம் சாலை மானூர் பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

திண்டிவனம்-புதுச்சேரி சாலை, மரக்காணம் கூட்டு ரோடு அருகே வந்த அவர்களை திண்டிவனம் போலீசார் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பேரணியாக செல்லக்கூடாது என தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியை கைவிட்ட அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் கட்சி தலைமை உத்தரவின் பேரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசின் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என முடிவு செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிரம்மதேசம்

இதேபோல் பிரம்மதேசத்தை அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் மரக்காணம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரகு தலைமையில் பா.ம.க.வினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக செல்ல முயன்றபோது அவர்களை பிரம்மதேசம் போலீசார் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தொிவித்தனர். ஆனால் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற பா.ம.க. வினர் 20-பேரை போலீசார் கைது செய்து ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.


Next Story