விருது பெற சென்ற அரசு ஆஸ்பத்திரி நர்சுக்கு விடுமுறை என பதிவு செய்ததால் பரபரப்பு
முதல்-அமைச்சரிடம் சிறந்த சேவைக்கான விருதுபெற சென்ற நர்சுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதி தராமல் விடுப்பாக பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக தலைமை நிர்வாக ஊழியர் விளக்கம் அளிக்க டீன் உத்தரவிட்டு உள்ளார்.
முதல்-அமைச்சரிடம் சிறந்த சேவைக்கான விருதுபெற சென்ற நர்சுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதி தராமல் விடுப்பாக பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக தலைமை நிர்வாக ஊழியர் விளக்கம் அளிக்க டீன் உத்தரவிட்டு உள்ளார்.
சிறந்த சேவைக்கான விருது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 17, 18-ந் தேதிகளில் ராமநாதபுரம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது 18-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்து பாராட்டினார்.
இந்த விழாவில் ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த புவணி(வயது 35) என்ற அரசு மருத்துவக் கல்லூரி நர்சு சிறந்த சேவைக்கான முதல்-அமைச்சரின் விருதை பெற்றார். இந்நிலையில் துறைரீதியான அனுமதியுடன் முதல்-அமைச்சரிடம் விருது பெற சென்ற புவணிக்கு 18-ந்தேதி பணி அனுமதி நாளாக கருதாமல் தற்செயல் விடுப்பாக பதிவு செய்தனர்.
அதிருப்தி
இதுபற்றி அறிந்த நர்சு புவணி அதிர்ச்சி அடைந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு துறைரீதியான அனுமதியுடன் முதல்-அமைச்சரிடம் விருது பெற சென்ற நிலையில் அதற்கான பணி அனுமதி வழங்காமல் தான் விடுமுறையில் சென்றதாக பதிவு செய்தது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சரிடம் விருது பெற சென்ற நர்சுக்கு அதற்கான அனுமதி வழங்காமல் விடுப்பாக பதிவு செய்த சம்பவம் நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
விளக்கம் அளிக்க உத்தரவு
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி டீன் செந்தில்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-
நர்சு புவணி முதல்-அமைச்சரிடம் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு விருது வழங்கப்பட்ட நாளில் அதற்கான அனுமதி வழங்காமல் தற்செயல் விடுப்பாக வருகை பதிவேட்டில் பதிவு செய்த தகவல் தற்போது தான் எனது கவனத்திற்கு வந்தது. உடனடியாக அந்த தற்செயல் விடுப்பு பதிவினை ரத்து செய்து பணி அனுமதி நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நர்சு தலைமை நிர்வாக பெண் ஊழியரிடம் விசாரணை நடத்தினேன். மேலும், இதற்கு உரிய விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரிடம் விருது பெற்ற நர்சு புவணி அரசு மருத்துவ கல்லூரி சார்பில் கவுரவிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.