கருணாநிதி வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை


கருணாநிதி வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை
x

கருணாநிதி வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை

கரூர்

குளித்தலை,

பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குளித்தலை பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல் முதலில் போட்டியிட்ட வெற்றி பெற்ற தொகுதி குளித்தலை.அரசியல் ரீதியாக பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வும் நேர் எதிர் துருவங்களாக இருந்தாலும், கொள்கை அடிப்படையில் மாறுபட்ட கட்சிகளாக இருந்தாலும் கருணாநிதி தமிழக மக்களுக்கு நல்லது செய்துள்ளார் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டப்பேரவை உள்ளிட்ட இடங்களில் மக்களுக்காக அவர் குரல் கொடுத்துள்ளார்.

ஒரு குடும்பத்திற்காக...

ஆனால் சமூக நீதி கட்சியாக சொல்லப்படும் தி.மு.க. 1957-ல் இருந்த தி.மு.க.வும் 2022 உள்ள தி.மு.க.வும் ஒரே கட்சியில்லை. கருணாநிதி இப்பகுதியில் தேர்தலில் நிற்கும் போது கிராமமாக மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்தார். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் சிவப்பு கம்பளம் விரிப்பில் நின்று சினிமா மாடல் போல நாற்று நடுபவர்களை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.70 ஆண்டுகளில் தமிழகம் எவ்வாறு மாறியிருக்கிறது என்பதற்கு தி.மு.க. எப்படி மாறியிருக்கிறது என்பதே சாட்சி. தமிழகத்தில் பின்தங்கிய தொகுதி எப்படி இருக்குமோ அப்படி குளித்தலை உள்ளது.

மாற்றம் இல்லை

கருணாநிதி வெற்றி பெற்ற முதல் தொகுதியான குளித்தலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பா.ஜ.க. நோக்கம் ஏழைகள் ஏழைகளாக இருக்க கூடாது என்பதுதான். 45 கோடி மக்களுக்கு வங்கி கணக்கை நரேந்திரமோடி ஆரம்பித்துள்ளார். வங்கி கணக்கு மூலம் அனைத்து திட்டங்களில் கிடைக்கும் பணம் அனைவருக்கும் நேரடியாக கிடைக்கச்செய்தார்.தி.மு.க அமைச்சர்கள் ஓராண்டு சாதனை குறித்து பேசுகிறார்கள். ஓராண்டு தி.மு.க ஆட்சியில் யாருக்கு சாதனை என்றால் தி.மு.க. குடும்ப உறுப்பினர்களுக்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.சாதாரண மக்களுக்கு சாதனை ஆண்டு என்று சொல்ல முடியாது. சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டு விட்டது. ஒவ்வொரு காவல்நிலையமும் ஒன்றிய செயலாளர் கையில் உள்ளது.

போர்க்கள வாழ்க்கையாக...

குஜராத்தில் மோடி கொண்டுவந்த 6 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றபட்டுவிட்டன. தமிழகத்தில் எந்த ஒரு திட்டமும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா இல்லை. 2024 முடியும் போது இந்தியாவில் அனைத்து வீடு களிலும் குழாய்கள் மூலம் குடிநீர் வரவேண்டும் என்று திட்டத்தை தொடங்கி 3 வருடமாக செய்துவருகிறது. காமராஜர் விவசாயிகளின் நலனுக்காக அணைகள் கட்டி கால்வாய்களை தூர்வாரினார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் தூர்வாருவது முதல் அனைத்திலும் ஊழல். ஊழல் செய்து சாதாரண மக்களின் வாழ்க்கையை போர்க்கள வாழ்க்கையாக தி.மு.க.வினர் மாற்றியுள்ளனர். நாங்கள் எதிர்பார்ப்பது செய்த வேலைக்கு கூலி. எனவே தேர்தலின்போது கூலியாக உங்களது ஓட்டை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story