வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை, பணம் திருட்டு
x

பெரம்பலூரில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

நகை, பணம் திருட்டு

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே சங்குப்பேட்டை சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் சாகித் அப்ரிடி (வயது 25). இவர் எளம்பலூர் சாலையில் ரோஸ் நகரில் வாடகை வீட்டில் தனது தந்தை சையது முகமது, தாயார் குர்ஷிதா யாஸ்மினுடன் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குர்ஷிதா யாஸ்மின் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் சாகித் அப்ரிடி வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை சையது முகமதுவை அழைத்துக்கொண்டு ஜெராக்ஸ் கடைக்கு சென்று விட்டார்.

வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து ஜன்னலை பெயர்த்து எடுத்தனர். பின்பு வீட்டில் நுழைந்து உள்ளே இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம், ¾ பவுன் தோடு, வெள்ளி அரைஞாண் கொடி மற்றும் கொலுசு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

நேற்று முன்தினம் இரவு சாகித் அப்ரிடி தனது கடையை மூடிவிட்டு தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் பெயர்த்து எடுக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பணம் மற்றும் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்களும், போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டன. பின்னர் அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story