செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு


செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
x

செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள் என பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

கரூர்

ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட பா.ஜ.க. சார்பில் கரூர் பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்சார கொள்ளை

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேட்டூர், தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் இருந்து கடந்த மே, ஜூன் இரு மாதங்களில் மட்டும் ரூ.4,600 கோடிக்கு மின்சாரத்தை தமிழக அரசு வாங்கியுள்ளது.நிலக்கரி பற்றாக்குறை என காரணம் கூறி செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள். இதையெல்லாம் மறைத்துவிட்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி மக்களிடம் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.

நேர்மையாளர்கள் பக்கம் இருக்க வேண்டும்

ஒரு குடும்பம் வாழ்வதற்காக 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 54 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பற்றாக்குறையை போக்க மத்திய அரசு 10 சதவீதம் நிலக்கரியை வெளியில் இருந்து வாங்கிக்கொள்ளலாம் என கூறியுள்ளது. ஆனால் வெளியே இருந்து 100 சதவீதம் வாங்க வேண்டும் என மத்திய அரசு கூறவில்லை. மே, ஜூன் மாதம் ரூ.422 கோடிக்கு நிலக்கரி வாங்கி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கருவூரார் சித்தர், சதாசிவம் பிரமேந்திரர் வாழ்ந்த இந்த பூமிக்கு தற்போது கொலுசு மாடல், ஹாட்பாக்ஸ் மாடல் என்ற பெயர் வந்துள்ளது. விழித்துக்கொள்வது மக்களின் கடமை. நேர்மையான ஆட்சியாளர்கள் வரவேண்டும் என்றால் மக்கள் நேர்மையான மனிதர்கள் பக்கம் நிற்க வேண்டும்.

கடுமையாக உழைக்க வேண்டும்

ஏழை மக்களை ஏழையாக இருக்க வேண்டும் என அரசியல்வாதிகள் நினைக்கும் வரை இந்த மண்ணில் ஏழைகளுக்கு விமோசனமும் இல்லை. பா.ஜனதா கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். பா.ஜ.க.வினரை மிரட்டினால் அனைவரும் உள்ளே போவீர்கள்.20-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க.வினர் ஒவ்வொரு வீடாக சென்று பிரதமர் செய்த திட்டங்கள் குறித்து விளக்கி கூற வேண்டும். உருட்டுக்கட்டை அரசியலிடம் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும். கரூர் மாவட்டத்தில் அரசியல் மாற்றம் நிகழ நீங்கள் காரணமாக இருக்க வேண்டும். பணத்தை வைத்து ஜனநாயகத்தை விலை பேசக்கூடிய அரசியல்வாதிகள் தமிழகத்தில் இருக்கக்கூடாது. அந்த அரசியல்வாதி இருக்கும் வரை ஏழை மக்கள் இருப்பார்கள். கடைசி ஏழைகள் இருக்கும் வரை பா.ஜ.க.வினருக்கு வேலை இருக்கிறது. ஏழைகளுக்காக வாழ்பவர் பிரதமர் மோடி.

6 லட்சம் நெசவு குடும்பங்கள் பாதிப்பு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் சரிசமமாக பாவித்து தடுப்பூசி கொடுத்து கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றியவர் பிரதமர் மோடி. ஆட்சிக்கு வரும் முன் தி.மு.க.வினர் நெசவுக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக தருவோம் என்றனர். ஆனால் இப்போது மின் கட்டணத்தை உயர்த்தியதால் 6 லட்சம் நெசவு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு கூறியதால் தான் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கூறுகிறார்கள். அந்த கடிதத்தை எங்களிடம் காண்பிக்கட்டும். பிறகு பார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story