"மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றியுள்ளனர்"


மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றியுள்ளனர்
x
தினத்தந்தி 1 Aug 2023 6:45 PM GMT (Updated: 1 Aug 2023 6:45 PM GMT)

பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

சிவகங்கை

மானாமதுரை,

பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

மானாமதுரையில் நடைபயணம்

பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற முழக்கத்துடன் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை 10 மணிக்கு அவர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில் நிலையம் பகுதியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். அண்ணா சிலை வழியாக தேவர் சிலை பகுதி வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் நடந்து வந்தார். பொதுமக்களை சந்தித்து மனுக்களை வாங்கினார். பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வாத்தியக்கருவிகளில் ஒன்றான கடம் மற்றும் மண்பாண்டம் தயாரிப்பு தொழிலில் மானாமதுரை சிறந்து விளங்குகிறது. எனவே கடம் தயார் செய்யும் இடத்துக்கு சென்று பார்வையிட்டார். மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தை இயக்கி, அது பற்றி தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். அவரை வரவேற்ற இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து மேளம் அடித்து மகிழ்ந்தார்.

மானாமதுரையில் நடைபயணத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

டாஸ்மாக் வருமானம்

வைகையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. மண்ணை சுரண்டி, சுரண்டி எடுத்து, விவசாயிகளையும், விவசாயத்தையும் நாசமாக்கிவிட்டனர்.ஆனால், டாஸ்மாக் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ரூ.44 ஆயிரம் கோடிக்கு வருமானம் தந்து கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் ரூ.54 ஆயிரம் கோடி என டாஸ்மாக் வருமானம் இலக்கை நிர்ணயித்துள்ளனர். பொதுமக்களை குடிகாரர்களாக மாற்றுகிறார்கள்.

2022-23ம் ஆண்டில் மட்டும் 23 சதவீதம் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. 19 வயது முதல் 60 வயது வரை உள்ள 19 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர்.

கீழடி

மானாமதுரை பானை உலகப்புகழ் பெற்றது. அமெரிக்கா வரை அதன் புகழ் பரவியுள்ளது. தமிழர்கள் உலகில் பழமையானவர்கள் என்பதை கீழடி மறுபடியும் நமக்கு உணர்த்தியுள்ளது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட மண்பானைகள் மானாமதுரையில் செய்யப்பட்டவை என்று சொல்லப்படும் அளவுக்கு வரலாற்று புகழ் வாய்ந்தது இந்த நகரம். ஆனால், இந்த ஊரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. 1982-ல் எம்.ஜி.ஆர். சிப்காட் தொழிற்சாலையை தொடங்கினார். ஆனால், 40 வருடங்களில் மூடப்பட்டுவிட்டது.

ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக மோடி வாக்களித்தார். தற்போது 5 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 5 மாதத்தில் மீதம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில், அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆனால், தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதிகள் என்னானது? என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ஆண்டவனுக்கே வெளிச்சம்

வரும்போது தெருவில் ஒரு போஸ்டரை பார்த்தேன். அதில், திருட வேண்டும் என்று நினைப்பவர்களைத்தவிர மற்ற அனைவருக்கும் மோடியை பிடிக்கும் என்று உள்ளது.

எதிர்க்கட்சிகள் சேர்ந்து மோடிக்கு எதிரான கூட்டணி குறித்து பேசுகின்றனர். அவர்கள் மீது எத்தனை வழக்குகள் இருக்கிள்றன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரி என பல்வேறு வழக்குகள் இவர்கள் மீதும், இவர்களின் குடும்பத்தினர் மீதும் உள்ளன. மக்களின் பணத்தை சுரண்டியதற்காகத்தான் இந்த வழக்குகள். அவர்கள்தான் மோடி வேண்டாம் என்கின்றனர்.

திராவிட மாடல் ஆட்சியினர், இதுவரை தமிழை கும்மிடிப்பூண்டியை தாண்டி வெளியே செல்லாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் பிரதமர், திருக்குறளை 100 மொழிகளில் மொழி பெயர்க்க உத்தரவிட்டார். இதுவரை 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. நாட்டை ஆளும் தலைமை என்பது திடகாத்திரமான, தெளிவான, துணிச்சல் மிக்கதாக இருக்க வேண்டும்.

2014-க்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற நிலை இருந்தது. தீவிரவாதத்துக்கு எதிராக கடந்த 9 வருடங்களாக மோடி எடுத்த முயற்சிகள் மக்களால் பாரட்டப்படுகிறது.

18 கட்சி கூட்டணிகளிடம் "உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்" என்றால், திங்கட்கிழமை மம்தா, வியாழக்கிழமை உத்தவ்தாக்கரே, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுல்காந்தி என்கின்றனர்.

ரூ.3 ஆயிரம் கோடி

மத்திய அரசு பட்டியலின மக்களுக்காக ரூ.3 ஆயிரம் கோடிைய தமிழகத்துக்கு ஒதுக்கியது. அந்த நிதியை மோசடியாக மகளிர் உரிமைத்தொகைக்காக எடுத்துள்ளனர். யார் பெற்ற குழந்தைக்கு யார் பெயர் வைப்பது? இந்த நிதி மாற்றத்தை அரசாணையாக நேற்று வெளியிட்டுள்ளனர்.

அனைத்திலும் நம்பர் ஒன் என்று சொல்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தை கடனாளி மாநில பட்டியலில் முதல் இடத்தில் வைத்துள்ளார்.

மீண்டும் மோடி பிரதமராக வருவதற்காக தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் நடைபயணம் சென்று பேசுவேன். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை நம்பி நாட்டை கொடுத்தால் ஊழல் பெருகிவிடும். எழுச்சியுடன் என் மண், என் மக்கள் நிகழ்ச்சிக்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


Next Story