அரசு பள்ளி தலைமையாசிரியை உள்பட 2 பேரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்ேறார்கள் போராட்டம்
புதுக்கோட்டை அருகே வெள்ளக்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை, உதவி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளக்கொல்லையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 28 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் அதிக மாணவர்கள் படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியர் ஆகியோர் மாணவர்களுக்கு முறையாக பாடம் கற்பிக்காததால் பெற்றோர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
வேறு பள்ளியில்...
ஆசிரியர்கள் மாணவர்களை டீ வாங்கி வர சொல்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்ய சொல்லி படிக்க விடாமல் செய்வதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு முறையாக பாடம் கற்பித்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தால் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வேறு பள்ளியில் குழந்தைகளை சேருங்கள் என்று தெரிவிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரையப்பட்டி தெற்கு பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்கக் கூடிய நிலை உள்ளது.
போராட்டம்
இந்நிலையில், முறையாக பாடம் கற்பித்து கொடுக்காத பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் உதவி ஆசிரியர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராமமக்கள் பள்ளி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வந்த தலைமை ஆசிரியையை பள்ளிக்குள் செல்ல விடாமல் தடுத்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் வட்டார உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கருணாகரன், கவிதா, தனராணி, சேந்தாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 மாதத்திற்குள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.