கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம், செல்போன் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம், செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் பிரசாத் (வயது 29), தொழிலாளி. இவர் அதி காலை 4 மணியளவில் சேண்பாக்கத்தில் உள்ள துணை மின்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென பிரசாத்தை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.500 ஆகியவற்றை பறித்து சென்றனர். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அதில், வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்காரத்தெருவை சேர்ந்த சரவணன் மகன் விக்னேஷ் (19), மூர்த்தி மகன் சீனிவாசன் (19), பாஸ்கர் மகன் கணபதி (23) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.