'ராமர் கோவிலுக்கும் வரமாட்டார்கள், தேநீர் விருந்துக்கும் வரமாட்டார்கள்..' - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
கவர்னரின் தேநீர் விருந்தை அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை,
குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்தில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்திருந்த நிலையில், கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் கவர்னரின் தேநீர் விருந்தை அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம் என புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"கவர்னரின் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். கவர்னராக இருந்தாலும் எங்களை எதிர் அணியினராகத்தான் பார்க்கிறார்கள். தேநீர் அருந்தும்போதாவது நாம் ஒன்றாக பேசுவோம். எனவே அரசியல் கட்சியினர் கவர்னரின் தேநீர் விருந்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கவர்னரின் தேநீர் விருந்தை அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம். ராமர் கோவிலுக்கு அழைத்தாலும் வரமாட்டார்கள், தேநீர் விருந்துக்கு அழைத்தாலும் வரமாட்டார்கள். ஆனால் நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று மட்டும் சொல்வார்கள்."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.