திருட சென்ற வீட்டில் மதுபோதையில் அயர்ந்து தூங்கிய திருடன்...!
கட்டிலுக்கு அடியில் குறட்டை சத்தம் கேட்டதால் வீட்டு உரிமையாளர் சந்தேகமடைந்துள்ளார்.
சென்னை,
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் உரிமையாளர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளனர். வெளியூர் சென்றுவிட்டு வீடு திருப்பியபோது வீட்டிற்குள் யாரோ நிலைந்திருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டில் பணம் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டில் உள்ள படுக்கையறையில் சென்றுபார்த்தபோது அங்கு கட்டிலுக்கு அடியில் மதுபோதையில் திருடன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளான். உடனடியாக, திருடனை பிடிக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், தூக்கத்தில் இருந்து விழித்த திருடன் வீட்டில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றுவிட்டான். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய திருடன் ஏழுமலையை (27வயது) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திருடனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 49 ஆயிரம் ரூபாய் பணத்தையும் போலீசார் மீட்டனர். திருட சென்ற இடத்தில் மதுபோதையில் குறட்டையிட்டு அயர்ந்து தூங்கி, தப்பியோடிய திருடன் ஏழுமலையை போலீசார் சிறையில் அடைத்தனர்.