மளிகை கடையின் ஷட்டரை உடைத்து திருட்டு
பொங்கலூர் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் வனராஜ் (வயது 40). இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு ஷட்டர் திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து ஷட்டரை திறந்து பார்த்தனர். அப்போது கடைக்குள் ரத்தக்கறையாக காணப்பட்டது.
மேலும் கடையில் சில்லறையாக வைத்திருந்த ரூ.300 மட்டும் திருட்டு போயிருந்தது ெதரியவந்தது. இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்த திருடன் அங்கிருந்த கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.