மளிகை கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது
தாராபுரத்தில் மளிகை கடையில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-
செல்ேபான் திருட்டு
தாராபுரம் அண்ணா நகரை சேர்ந்த ரவிக்குமார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் செல்போனுக்கு கடையில் சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார்.அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் 2 வாலிபர்கள் செல்போனை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த வாலிபர்களின் அடையாளங்களை வைத்து அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். கேமராவில் பதிவான அடையாளம் மூலம் விசாரித்தபோது அவர்கள் கமுதி ஒரத்தூர் பகுதியை சேர்ந்த
ஆனந்தகுமார் (வயது 35), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தங்க பாண்டி (33) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் திருடி சென்ற ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்வேறு வழக்குகள்
இவர்கள் 2 பேர் மீதும் சேலம், திருப்பூர், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.