பாகம்பிரியாள் கோவிலில் திருக்கல்யாணம்
பாகம்பிரியாள் கோவிலில் திருக்கல்யாணம்
தொண்டி,
திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீக நாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் மண்டபத்திற்கு பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளினர். தொடர்ந்து யாக வேள்விகளும், காப்பு கட்டுதல், வஸ்திரம் சாற்றுதல், பூணூல் அணிவித்தல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பின்னர் சுவாமியின் கையில் இருந்த தாலியை அம்மனுக்கு அணிவித்து சிவாச்சாரியார்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். சுவாமி, அம்பாள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், தாலிக்கயிறு, குங்குமம் போன்ற பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் புஷ்ப பல்லாக்கு அலங்காரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக அம்மன் புதுப்பையூர் கிராமத்திற்கு எழுந்தருளினார். இதையொட்டி சாமி, அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. பூஜைகளை மணிகண்ட குருக்கள், வல்மீகநாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதில் தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் மற்றும் உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.