வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் -ஏராளமான பக்தர்கள் தரிசனம்


வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்  -ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 3-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 1000 நாமங்களில் அர்ச்சனை, மாலை 4.30 மணிக்கு சிவாலயத்தில் பிரதோஷ பூஜை, மாலை 6.30 மணிக்கு கொடுமுடி தீர்த்தம் கொண்டு வந்து தேன் தினை மாவுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழா சிறப்பு நிகழ்ச்சியான கணபதி ஹோமம், நல்லகாத்து ஆற்றிலிருந்து திருமஞ்சனம் கொண்டு வந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சொற்பொழிவு நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் முருகப்பெருமானுக்கும் வள்ளி -தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

வால்பாறை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஊர்களில் இருந்து வந்திருந்த முருக பக்தர்கள் திருக்கல்யாண விழாவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற தலைவர் மதனகோபால் முதலியார் செய்திருந்தார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு, முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிங்காரம், சீனிவாசன், இருளப்பன், கோபால் மற்றும் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் பங்குனி உத்திரத்தையொட்டி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வேலாயுதசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில், ஜோதி நகரில் உள்ள விசாலாட்சியம்மன் உடனமல் ஜோதி லிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


Next Story