திருப்புவனத்தில் அரசு பஸ்சில் கல்வீசி கண்ணாடி உடைப்பு-வாலிபர் கைது
திருப்புவனத்தில் அரசு பஸ்சில் கல்வீசி கண்ணாடி உடைப்பு-வாலிபர் கைது
திருப்புவனம்
திருப்புவனத்தில் இருந்து பழையனூர் வழியாக குருந்தங்குளத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. பயணிகளை இறக்கிவிட்டு திருப்புவனத்திற்கு அந்த பஸ் திரும்பி வந்து கொண்டிருந்தது. டிரைவராக சதீஷ்குமார் ( வயது 34) என்பவரும், கண்டக்டராக ரகுநாதன் (53) என்பவரும் பணிபுரிந்தனர். திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே வந்தபோது, டவுன் பஸ்சை 2 பேர் வழிமறித்தனர். மேலும் பஸ்சின் கண்ணாடியில் கல் வீசினர். இதனால் முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி விசாரணை நடத்தினார். திருப்புவனம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார், முத்துக்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். பஸ் மீது கல்வீசியதாக அய்யனாரை (24) போலீசார் கைது செய்தனர். முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.