திருத்தணி மத்தூர் ஊராட்சி நூலக கட்டிட மேற்கூரை சேதம்; வாசகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி


திருத்தணி மத்தூர் ஊராட்சி நூலக கட்டிட மேற்கூரை சேதம்; வாசகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
x

திருத்தணி மத்தூர் ஊராட்சி நூலக கட்டிட மேற்கூரை சேதமடைந்துள்ளதால் புதிய நூலக கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மத்தூர் ஊராட்சியில் மாவட்ட நூலக ஆணையக் குழு மூலம் கட்டப்பட்ட கிளை நூலகம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. நூலக வேலை நாட்களில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை படித்து வருகிறார்கள்.

தற்போது கட்டிடம் பழுதான நிலையில் நூலக கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் நூலகத்தின் சுவர்கள் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் மேற்கூரைகளில் நீர் கசிந்து புத்தகங்கள் நனையும் சூழல் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களின் நலன் கருதி இந்த கிளை நூலகத்திற்கு இலவச இணைய வழி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சேதமடைந்த நூலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு இதே இடத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story