சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 32 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பாலசந்தர் என்ற பாலா (வயது 26). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றார்.
சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் காணாததால் இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையே சிறுமியை அந்த வழியாக வந்தவர்கள் பஸ்சில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது பாலச்சந்தர் என்பவர் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கேயே விட்டு விட்டு சென்றதாக கூறினார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கு திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போக்சோ சட்டத்தில் பாலசந்தரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகளும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு 20 ஆண்டுகளும், சிறுமியை மிரட்டியதாக 2 ஆண்டுகள் என 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.