நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்


நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
x

திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்

நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை

திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. கீழ் தளத்தில் கல்லூரியும், மேல் தளத்தில் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஈரோட்டை சேர்ந்த சுமதி (வயது 19) என்ற மாணவி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் உள்ள தனது அறையில் மாணவி சுமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

இந்த நிலையில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாணவி தற்கொலைக்கான காரணம் தொடர்பாக சக மாணவிகள், மாணவியின் பெற்றோர், கல்லூரி நிர்வாகத்திடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர். நர்சிங் கல்லூரி மற்றும் விடுதிக்கு நேரில் சென்றும் விசாரிக்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

மேலும் மாணவி கடைசியாக யாரிடம் பேசினார்?. அவருக்கு யாரெல்லாம் அடிக்கடி போன் பேசி உள்ளனர்? எனவும் மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

வீட்டில் இருந்து செல்ல முடிவு

மாணவியின் தந்தை ஈரோட்டில் வசித்து வருவதாகவும், அவருடைய தாய், கணவரை பிரிந்து சென்னையில் தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மாணவியை விடுதியை காலி செய்துவிட்டு வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்லுமாறு அவரது தாய் கூறியதாகவும், இதனால் மாணவி நேற்று முன்தினம் விடுதியை காலி செய்துவிட்டு வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு வந்து செல்ல முடிவு செய்து இருந்ததாகவும், இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரிக்க உள்ளனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து மாணவி சுமதியின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story