எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களை கூட தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி சாடினார்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற அளவுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பணி செய்ய வேண்டும். இரு பெரும் அரசியல் தலைவர்கள் கற்றுக்கொடுத்த அரசியலை இந்த தொகுதியில் பயன்படுத்தி மிகப்பெரிய சரித்திர வெற்றியை பெற வேண்டும். கட்சிக்காரர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது உணர்வுகள் கிழக்கு தொகுதி நோக்கி இருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சி எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்ப்பதாக தி.மு.க.காரர்களே கருதுகின்றனர்.
2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட தி.மு.க. கிள்ளி போடவில்லை. தி.மு.க.காரர்கள் கூனி குறுகிதான் வாக்கு சேகரிக்க முடியும். அ.தி.மு.க.காரர்கள் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கலாம். 5-ல் ஒரு பகுதி ஆட்சி முடிந்த பிறகும் முக்கிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களை கூட தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.
ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு 485 கோடியில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக தி.மு.க. நிறுத்துகிறது. மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இதனால் 564 பேர் மருத்துவ கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ படிப்பு செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்றது" என்றார்.