பா.ஜனதா சதித்திட்டத்தின் முன்னோட்டமே இது: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு


பா.ஜனதா சதித்திட்டத்தின் முன்னோட்டமே இது:  மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
x
தினத்தந்தி 21 April 2024 12:07 PM IST (Updated: 21 April 2024 12:11 PM IST)
t-max-icont-min-icon

பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லை நீக்கியவர்கள் தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள் என்று பா.ஜனதாவை மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

சென்னை,

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் (டிடி நியூஸ்) லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், தூர்தர்ஷன் லோகோவை காவி நிறத்தில் மாற்றியதற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;தற்போது #தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!

தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story