"திமுகவிற்கு இந்த வாரம் சிறைக்கு செல்லும் வாரம்" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக ஊழல் கட்சி என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சொன்ன கருத்தை வரவேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் ரத்து செய்து மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு ஏன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு பதற்றமடைய வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், செந்தில்பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் பாதிபேர் சிறைக்கு செல்வது உறுதி எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கவர்னர் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் தெரிவித்த அவர், விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரவுள்ளது என்றும் அந்த செய்திதான் தமிழக மக்களுக்கு தீபாவளி எனவும் தெரிவித்தார். ஏற்கனவே ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மீண்டும் ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்படும் எனவும் கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், செந்தில்பாலாஜி ஒரு கைதி என்றும் பாராமல், தயவு செய்து எதுவும் சொல்லிவிடாதே என கண்ணீர் வடிக்காத குறையாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கெஞ்சியதாக பேசினார்.
பின்னர், ஆர்பாட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
திமுக ஊழல் கட்சி என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்ன கருத்தை வரவேற்பதாகவும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, மற்ற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும் இடத்தில் நாங்கள் தான் இருப்போம் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் எனவும் திமுகவிற்கு இந்த வாரம் சிறைக்கு செல்லும் வாரம் என்று கூறினார். அமலாக்கத்துறையால் ஏற்பட்ட பாதிப்பை திசைதிருப்பவே 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.