தூத்துக்குடி புதுமணத் தம்பதி கொலை வழக்கு - மேலும் 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்
கருப்பசாமி, பரத் விக்னேஷ் ஆகிய 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் இன்று சரண் அடைந்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மாரிசெல்வம் என்ற இளைஞரும் கார்த்திகா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருமணமான 3 நாட்களில் நேற்று முன்தினம் மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய இரண்டு பேரையும் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம்(47), அவருடைய உறவினர்களான இசக்கிராஜா(23), ராஜபாண்டி(27) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய உறவினர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களையும் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கருப்பசாமி, பரத் விக்னேஷ் ஆகிய 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் இன்று சரண் அடைந்தனர்.