தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் - 50-க்கும் மேற்பட்டோர் கைது


தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் - 50-க்கும் மேற்பட்டோர் கைது
x

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றோடு (மே 22) நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் ஒருபகுதியாக தூப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மாநகராட்சிக்கு சொந்தமான கல்லறையில் புதைக்கப்பட்டனர். அந்த கல்லறையில் உயிர் நீத்தவர்களில் உறவினர்கள், ஒருசில சமூக ஆர்வலர்கள் ஊர்வலமாக கல்லறைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பாதகைகள் ஏந்தியும், எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் போராட்டம் நடத்தியவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக கூறி 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பல இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story