நாள்தோறும் விபத்து நடக்கும் தொப்பூர் கணவாயில் சாலை கட்டமைப்பு மாற்றப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


நாள்தோறும் விபத்து நடக்கும்  தொப்பூர் கணவாயில் சாலை கட்டமைப்பு மாற்றப்படுமா?   வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 2 Oct 2022 6:45 PM GMT (Updated: 2 Oct 2022 6:46 PM GMT)

நாள்தோறும் விபத்து நடக்கும் தொப்பூர் கணவாயில் சாலை கட்டமைப்பு மாற்றப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நாள்தோறும் விபத்து நடக்கும் தொப்பூர் கணவாயில் சாலை கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

250 பேர் பலி

தமிழகத்தில் சேலம்- தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக சேலம்- தர்மபுரி இடையே உள்ள நெடுஞ்சாலையில் தினமும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. லாரி, டிரக்குகள், கன்டெய்னர்கள் என கனரக வாகனங்கள் அதிகளவில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கி.மீட்டரில் அமைந்துள்ளது.

இந்த சாலையில் கட்டமேடு முதல் போலீஸ் சோதனைச்சாவடி வரை உள்ள 3 கி.மீட்டர் சாலை மிகவும் சரிவாகவும், வளைவாகவும் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மலைப்பாதையில் கனரக வாகனங்களை ஓட்டுவது போல் டிரைவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக உள்ள இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த பகுதியில் விபத்துகள் நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விபத்துகள் நடப்பது தொடர் கதையாக உள்ளது.

பிளாக்ஸ்பாட் பகுதி

இந்த நிலையில் தமிழக அரசு விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி அதிக விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் பிளாக்ஸ்பாட் பகுதியான தொப்பூர் கணவாயில் கடந்த ஆண்டின் இறுதியில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். இங்கு விபத்துகளை தடுக்க வாகனங்களை மலைப்பாதை சாலையில் 30 கி.மீட்டர் வேகத்தில் 2-வது கியரில் இயக்குதல், இந்த விதியை மீறும் வாகனங்களுக்கு மின்னணு முறையில் அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகள் நடக்கும்போது படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்களுக்கு உடனடியாக முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை கிடைக்க தொப்பூர் பகுதியிலேயே அவசர சிகிச்சை மையத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். தொப்பூர் மலைப்பாதையில் தொடரும் விபத்துகளை தடுக்க சாலையை சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

கட்டமைப்பை மாற்ற வேண்டும்

இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தொப்பூரைச் சேர்ந்த ராஜா:- தொப்பூர் மலைப்பாதையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை கனரக வாகனங்களில் ஏற்றப்பட்ட பொருட்களின் எடை அதிகபட்சம் 5 டன் அளவு இருந்தது. அப்போது இந்த சாலையில் அதிக விபத்துக்கள் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கனரக வாகனங்களில் எடுத்து செல்லப்படும் பொருட்களின் எடை 40 டன் முதல் 50 டன் வரை அதிகரித்துள்ளது. இந்த சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்தபோது கனரக வாகனங்களில் எடுத்து செல்லப்படும் பொருட்களின் எடை பல மடங்கு அதிகரித்து இருப்பதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப சாலையின் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.

அதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கனரக வாகனங்கள் மலைப்பாதையில் கீழ் நோக்கி செல்லும்போது டிரைவர்களின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சாலையின் கட்டமைப்பை வாகன போக்குவரத்து அதிகரிப்புக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். இங்கே விபத்துகள் நடக்கும் போது உயிருக்கு போராடுபவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை இந்த பகுதியிலேயே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து அவசர சிகிச்சை

லாரி டிரைவர் ஜெயபிரகாஷ்:- தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகளை கட்டுப்படுத்த வேகம் குறைப்பு, சாலையில் கீறல் போன்று பள்ளங்களை ஏற்படுத்தி அதிர்வுகளை உருவாக்குதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இருந்த போதிலும் இங்கு விபத்துக்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்த பகுதியில் விபத்தில் சிக்கியவர்களை சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

விபத்து நடந்தால் சிறிது நேரத்தில் இந்த பகுதி சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மீட்பு பணியில் ஈடுபடும் ஆம்புலன்ஸ்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் உடனடி சிகிச்சை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தால் பலர் உயிரிழக்கிறார்கள். இதை தடுக்க தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நிலையத்தை விபத்து அவசர சிகிச்சை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். இங்கு தேவையான அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம்

சமூக ஆர்வலர் மணி:- தொப்பூர் மலைப்பாதையில் விபத்து நடக்கும் இடங்களில் சில 108 ஆம்புலன்சுகளை நிரந்தரமாக நிறுத்தி வைத்து விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக மீட்க ஏற்பாடு செய்ய வேண்டும். தொப்பூர் மலை பாதையில் விபத்து நடக்கும் போது தர்மபுரி அல்லது சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு வரும் தீயணைப்பு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதால் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தொப்பூர் பகுதிக்கு நிரந்தரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story