அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது


அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
x

மருந்து, மாத்திரைகள் வழங்கியதற்கான ரூ.65¼ லட்சம் வழங்காததால் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

ரூ.65¼ லட்சம் வழங்கவில்லை என புகார்

அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் மொத்தம் ரூ.65¼ லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் வழங்கியதற்கான தொகையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் மருந்துகள் வழங்கியவர்கள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த 3 மருந்து வியாபாரிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

பிச்சை எடுக்கும் போராட்டம்

பொதுமக்களின் உயிர் காக்க நாங்கள் மருந்துகளை வழங்கினோம். ஆனால் இன்று எங்களின் உயிர் கேள்விக்குறியாக உள்ளது. வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் தொழில் செய்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, கொரோனா பாதுகாப்பு கவச ஆடையணிந்த ஒருவர் மருத்துவமனை வாயிலில் ஓரமாக நின்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், மருத்துவமனைக்கு வருகை புரிந்த நோயாளிகள், அருகே உள்ள கடைகள், சாலையில் சென்ற மக்களிடம் மருந்து வியாபாரிகள் பிச்சை எடுத்தனர்.

கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 3 மருந்து வியாபாரிகளையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 290, 341 பிரிவினை கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story