கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
சென்னை,
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்படும் என்று 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதற்காக மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.
இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான கடந்த 15 அன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இ-சேவை மூலம் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன், நிராகரிக்கப்பட்ட 56.50 லட்சம் பேருக்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இன்று முதல் அவர்களின் செல்போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.