ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நூதன போராட்டம்


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நூதன போராட்டம்
x

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்த வேண்டும் என்பது உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நூதன போராட்டத்தை நடத்தினர்.

சென்னை,

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், போட்டித்தேர்வு மூலம் மறு நியமனம் என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்யவேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 28-ந்தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நூதன போராட்டம்

இந்த போராட்டத்தின் 3-வது நாளான நேற்று, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் களம் இறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஆண்கள் சிலர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மொட்டை அடித்து நாமம் போட்டும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், 2 பேர் பிணம் போல் படுத்தும், அவர்களை சுற்றி பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்தும் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையே என்று கதறி அழுதனர். இந்த போராட்டத்தால் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அடுத்தகட்டமாக அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு போராட்டத்தை விரிவுப்படுத்துவோம் என்றும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story