திருமணம் நிச்சயித்த பெண்ணுடன் பழகிய புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி மிரட்டல்


திருமணம் நிச்சயித்த பெண்ணுடன் பழகிய புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி மிரட்டல்
x

விழுப்புரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் பழகிய புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விழுப்புரம்

விழுப்புரம்

காதல்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில், தான் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தேன். அப்போது அதே மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றி வந்த விழுப்புரம் அருகே சிறுவாலை கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் விஜய்(24) என்பவர் என்னுடன் அறிமுகமானார். நாங்கள் இருவரும் 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் என்னிடம் ஆசைவார்த்தைகளை கூறி பலமுறை தவறாக நடந்து கொண்டார்.

பின்னர் விஜய்க்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்த விஷயம் எனக்கு தெரிய வந்தவுடன் அவருடனான பழக்கத்தை தவிர்த்து விட்டு அவரை விட்டு விலகினேன். இந்த சூழலில் எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பணம் கேட்டு மிரட்டல்

இதனையறிந்த விஜய், என்னிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் கொடுக்கவில்லை எனில் என்னுடன் பழகிய புகைப்படங்களை வெளியிடுவதாக கூறியும் மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story