ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா
x

வாகைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தப்பள்ளியில் நேற்று தமிழ்நாட்டில் சிறந்த பள்ளியாக நெல்லை மாவட்டத்தில் இருந்து தேர்வு பெற்று தமிழக அரசின் விருது பெற்றதற்கான பாராட்டு விழா, கல்விச்சீர் வழங்கும் விழா, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை லிசி வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு புதிய ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். பின்னர் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் கலெக்டர் விஷ்ணு பேசுகையில், "வாகைகுளத்தில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைத்து தரப்படும். மேலும் இந்த கிராமத்தில் இருந்து மேற்கல்வி பயில செல்வதற்கு வசதியாக பஸ்வசதி ஏற்படுத்தி தரப்படும். தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் படிப்படியாக இந்த பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்" என்றார். பின்னர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.சுரேஷ், வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலர் ரெஜினி, வட்டார கல்வி அலுவலர் செபஸ்தியாயி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிஷோர்குமார், பொன்னுலட்சுமி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, யூனியன் துணைத்தலைவர் இசக்கிபாண்டி, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, பஞ்சாயத்து தலைவர் முத்துசெல்வி, துணைத்தலைவர் சுப்பிரமணியன், டி.வி.எஸ். கள இயக்குனர் முருகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் புஷ்பலதா, ஆசிரியர் பயிற்றுனர் செல்வி சுப்புலட்சுமி, கூட்டுறவு சங்கத்தலைவர் முத்துராஜ், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை கனகா நன்றி கூறினார்.


Next Story