அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மாடு முட்டியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம்


அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மாடு முட்டியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம்
x

அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மாடு முட்டியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரம் நகர் பகுதியில் தெருக்களில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. நேற்று அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று அங்கு கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த ராமகிருஷ்ணன் (வயது 57) என்பவரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே மாடு அந்த பகுதியில் கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்ற 31 வயது கர்ப்பிணி ஒருவரையும் முட்டி தூக்கி வீசியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மற்றொரு பெண் ஒருவரையும் அந்த மாடு முட்டி கிழித்ததில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.ஒரே நாளில் அடுத்தடுத்து கர்ப்பிணி உள்பட 3 பேரை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அய்யப்பன்தாங்கல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அந்த மாட்டை பிடிக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.


Next Story