அமைச்சர் வாகனத்தின் மீது பாஜகவினர் காலணி வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல்: சீமான் கண்டனம்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலனி வீசிய செயல் நாகரிகமற்றது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் ஐயா பழனிவேல் தியாகராஜன் அவர்களை குறிவைத்து காலணி வீசியுள்ள பாஜகவினரின் அநாகரிகச்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வட மாநிலங்களில் காலங்காலமாக கடைபிடித்துவரும் வன்முறை அரசியல் வெறியாட்டத்தை தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல நுழைக்க முயலும் பாஜகவினரின் தரம் தாழ்ந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்திய பெருநாட்டின் ஆகச்சிறந்த தேசப்பக்தர்களாக தங்களுக்கு தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜகவினர், நாட்டிற்காக இன்னுயிர் இழந்த இராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் திட்டமிட்டு வீண்மோதலை தூண்டியிருப்பது வெட்கக்கேடானது. மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சரை வழிமறித்து காலணி வீசியதன் மூலம் நிதியமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் மட்டும் பாஜக அவமதிக்கவில்லை. நாட்டிற்காக உயிர்நீத்த வீரரின் தியாகத்தையும் அற்ப அரசியலுக்காக பாஜக கொச்சைப்படுத்தி விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.