திண்டுக்கல்லில் இடி, மின்னலுடன் மழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திண்டுக்கல்லில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் பாதி தூரம் சென்ற மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.
அதிகாலையில் மழை
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் உள்பட 11 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று அதிகாலை 4.30 மணிக்கே இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நன்றாக விடிந்த பின்னரும் விடாமல் பெய்து கொண்டே இருந்தது.
மேலும் வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என்று எச்சரித்து இருந்ததால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்று மாணவர்களும், பெற்றோரும் காலை 7 மணியில் இருந்தே தொலைக்காட்சியை பார்த்தபடி இருந்தனர். ஆனால் காலை 7.30 மணி வரை விடுமுறை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. திண்டுக்கல், பழனி உள்பட நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் கொட்டும் மழையில் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
விடுமுறை
மாணவர்கள் மழைக்கோட்டு அணிந்தும், குடையை பிடித்து கொண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டு சென்றனர். ஒருசில மாணவர்கள் சைக்கிளில் நனைந்தபடி சென்றனர். இதற்கிடையே காலை 7.40 மணிக்கு தொடர்மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பூங்கொடி அறிவித்தார். இதனால் வீடுகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டு தயாராகி கொண்டிருந்த மாணவர்கள் வீட்டிலேயே இருந்து கொண்டனர்.
ஆனால் பள்ளிகளுக்கு காலையிலேயே சென்ற மாணவர்கள், வீட்டில் இருந்து புறப்பட்டு பாதி தூரம் சென்ற பின்னர் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு திரும்பி சென்றனர். அதன் பின்னர் பகல் முழுவதும் மழை பெய்யவில்லை. ஆனால் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. வெயிலின் தாக்கமும் குறைவாக இருந்தது.
இந்த நிலையில் இரவு 9.15 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் கன மழையாக மாறியது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த மழை நீடித்தது. அதன் பிறகு விட்டு, விட்டு மழை பெய்தது. இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரை திண்டுக்கல்லில் 35 மி.மீ., கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 43.6 மி.மீ., பழனியில் 14 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 144.3 மி.மீ. மழை பெய்தது.