யூ டியூபர் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


யூ டியூபர் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

நிபந்தனையை மீறியதால் யூ டியூபர் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

மதுரை,

நிபந்தனையை மீறியதால் யூ டியூபர் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நிபந்தனை ஜாமீன்

யூ டியூபில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோக்களை சாட்டை துரைமுருகன் என்பவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஆனால் அவர் அந்த நிபந்தனையை மீறி, மீண்டும் அவதூறு வீடியோக்களை வெளியிட்டதாகவும், அவருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் ரத்து

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இணையதளம், 21-ம் நூற்றாண்டின் அற்புதமான கண்டுபிடிப்பு. அதன் ஒரு பகுதியான யூ டியூப் மூலம் இந்தியாவில் 63 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யூ டியூப் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இவர் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் தனது வீடியோக்கள், பொதுமக்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அவதூறாக கருத்துகளை தெரிவிக்கிறார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜாமீன் அளித்தபோது விதித்த நிபந்தனையை மீறி, முதல்-அமைச்சருக்கு எதிராக அவதூறு வீடியோவை மீண்டும் மனுதாரர் வெளியிட்டுள்ளார் எனவே மனுதாரருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story