டிக்-டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை


டிக்-டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
x

கோவை பெண்ணை ஆபாசமாக பேசியதாக டிக்-டாக் பிரபலங்களான ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

கோவையைச் சேர்ந்த யூ-டியூபர் சித்ரா. இவர் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் பெயரிலேயே யூ-டியூப் சேனல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மதுரை டிக்-டாக் பிரபலங்களான ரவுடி பேபி சூர்யா-சிக்கா என்ற சிக்கந்தர் ஆகியோர் குறித்து கோவை சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பதிலுக்கு சிக்கா என்கிற சிக்கந்தர் தினமும் அவரது யூ-டியூப் சேனல் மூலமாக சித்ராவை கேலி செய்து வீடியோ வெளியிட்டதாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும், தன்னை மிரட்டிய சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மேலும் அவர் கூறி இருப்பதாவது:-

ஆபாச பேச்சு

நான் குழந்தைகளுக்காக சேவை செய்து வருகிறேன். யூ-டியூப் மூலம் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர், சாதனா ஆகியோர் சமூகவலைத்தளங்களில் பதிவிடும் வீடியோ குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது.

அசிங்கமான வீடியோ, ஆபாசமாக பேசுவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதை கண்டித்து கேட்டால் மிரட்டல் விடுகின்றனர். ஆபாசமாக வீடியோ பதிவிடும் சேனல்களை முடக்க வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

கைது

இந்த புகாரின்பேரில் மதுரை சைபர் கிரைம் போலீசார், நேற்று காலை ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை அழைத்து விசாரித்தனர்.

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசுவது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர். இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளங்களிலும் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.


Next Story