அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது - சசிகலா பேச்சு
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது என்று சசிகலா கூறினார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. அதிமுக தலைமை கழக அலுவகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதிமுகவில் நிலவி வரும் சூழல் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா பேசியதாவது:-
இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது. தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது. பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்த பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது.
நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்துவிடக் கூடாது. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு நிஜத்தை நிச்சயம் அடைவோம். ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள்.
பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை பொருளாளரே அறிவிக்க முடியும். அப்படி இருக்கையில் இது எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும். அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது.
இவ்வாறு அவர் கூறினார்.