கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
x

பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

பங்குனி திருவிழா

கரூரில் பிரசித்தி பெற்ற அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நந்தி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், பூதகி வாகனம், ரிஷப வாகனம், திருக்கயிலாய வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய பசுபதீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவம்

தொடர்ந்து கோவில் மண்டபத்தில் அலங்காரவல்லி, சவுந்திரநாயகியுடன் மணக்கோலத்தில் பசுபதீஸ்வரர் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி, திருத்தேர் வடம் பிடித்தல் விழா நடக்கிறது. 6-ந்தேதி நடராஜ மூர்த்திக்கு தீர்த்தவாரியும், 7-ந்தேதி விடையாற்றி உற்சவமும், 8-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் சொற்பொழிவும், இசைநிகழ்ச்சியும் நால்வர் அரங்கில் நடைபெறுகிறது.


Next Story