திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு முப்பழங்கள் படையல் நாளை மறுநாள் நடக்கிறது


திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு முப்பழங்கள் படையல் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 30 Jun 2023 8:00 PM GMT (Updated: 30 Jun 2023 8:00 PM GMT)

திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை மறுநாள் முருகப்பெருமானுக்கு முப்பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

மதுரை

திருப்பரங்குன்றம்


திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை மறுநாள் முருகப்பெருமானுக்கு முப்பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

ஆனி ஊஞ்சல் திருவிழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் மாலை 6 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாராக உள்ள ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இதனையடுத்து ஆஸ்தான மண்டபத்தை 3 முறை வலம் வருகிறார். அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முப்பழங்கள் படையல்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள்(3-ந்தேதி) முப்பழ பூஜை நடக்கிறது. விழாவையொட்டி பகல் 12 மணியளவில் உச்சிக்கால வேளையில் கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், சத்யகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள் ஆகிய 5 சன்னதிகளிலுமாக சுவாமி, அம்பாளுக்கு வாழை, மா, பலா, ஆகிய முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இதேபோல கோவிலில் உள்ள மற்ற விக்ரகங்களுக்கும் முப்பழம் படையல் நடக்கிறது. விழாவின் முத்தாய்ப்பாக இரவு 7 மணியளவில் சிம்மாசனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் மற்றும் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story