திருப்புவனம் வைகை ஆற்றுப்பகுதியில் தூய்மை பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்


திருப்புவனம் வைகை ஆற்றுப்பகுதியில் தூய்மை பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:45 AM IST (Updated: 10 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் வைகை ஆற்றுப்பகுதியில் தூய்மை பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் வைகை ஆற்றுப்பகுதியில் தூய்மை பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தூய்மை பணி

திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்று பகுதியில் நேற்று நீர்நிலைகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் மாபெரும் தூய்மை பணியை கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்படி நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை நீடித்து நிலைத்த வகையில் பயன்படுத்துதல், மேம்படுத்துதல், பாதுகாத்தல், தேவைப்படும் நீர் நிலைகளை மறு சீரமைப்பு செய்திடல், பயன்பாடற்ற நீர் நிலைகளை கண்டறிந்து மீட்டெடுத்தல் நடவடிக்கைகளும் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில் வைகை ஆறு பெரும் பங்கு வகிக்கிறது.

எனவே நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியினை வைகை ஆற்றில் இருந்தே தொடங்கிடும் பொருட்டு திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட வைகை நதிக்கரை பகுதியில் மாபெரும் தூய்மை பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள், மற்றும் நீர்நிலை பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இப்பணி சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

2,800 டன் குப்பைகள்

இந்த நிகழ்ச்சியில், வைகை ஆற்றுக்கரை பகுதியில் இருந்த அமலைச் செடிகள், முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் கலயம் மற்றும் பொதுமக்களால் ஆற்றில் விடப்பட்ட துணிகள், நெகிழி கழிவுகள், போன்றவைகளை ஆற்றுக்கரையில் சுமார் 300 மீட்டர் சுற்றளவில் தூய்மைப்படுத்தும் பணி, கலெக்டர், நீர்நிலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டும் அதில் 2.800 டன் குப்பைகளும் சேகரிக்கப்பட்டது.

சேகரிக்கப்பட்ட குப்பைகளை பேரூராட்சி தூய்மை பணியாளர் மூலம் பேரூராட்சி சுகாதார வாகனம் மற்றும் பொக்லைன் வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி செயலர் (பொறுப்பு) கந்தசாமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி இயக்குனர்கள் ராஜா (பேரூராட்சிகள்), குமார் (ஊராட்சிகள்), நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவி பொறியாளர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜோதிநாதன், ராஜசேகரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story