திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நெற்கதிர் வைத்து பூஜை


திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நெற்கதிர் வைத்து பூஜை
x

பெண் பக்தரின் கனவில் வந்த உத்தரவுப்படி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஒரு பிடி நெற்கதிர் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும்.

நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

உத்தரவு பெற்ற அந்த பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தைக் கூறினால், சாமியிடம் பூப்போட்டு கேட்டு அதன்பின்னர் பக்தரின் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப்பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முந்தைய காலங்களில் துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா, பாகிஸ்தானை வென்றது என்றும், மண் வைத்து பூஜிக்கப்பட்ட போது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்ததாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு பக்தர்களுக்கு கிடைத்த உத்தரவுகளின்படி ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி கரும்பு, வேல் ஆகியவற்றை வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பெண் பக்தர் ஒருவருக்கு கனவில் கிடைத்த உத்தரவின்படி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பூஜை பொருள் மாற்றப்பட்டு, ஒரு பிடி நெற்கதிர் வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய தாக்கம் வரும் நாட்களில் தெரியும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.


Next Story