பாஜக நிர்வாகி அமர்பிரசாத் கைது


பாஜக நிர்வாகி அமர்பிரசாத் கைது
x

பாஜக நிர்வாகி அமர்பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அருகே 45 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தை பாஜகவினர் நேற்று நட்டு வைத்தனர். ஆனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாஜக கொடிக்கம்பம் நட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கொடிக்கம்பம் நட்ட நெடுஞ்சாலைத்துறையிடம் முறையாக அனுமதி பெறவில்லை என தகவல் வெளியானது.

கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று இரவு பாஜகவினர் அப்பகுதியில் திரண்டனர். பாஜக நிர்வாகியும், தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு தலைவருமான அமர்பிரசாத்தும் அங்கு வந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தையும் போலீசார் வரவழைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த பாஜகவினர் ஜேசிபி வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதாக பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், பாஜக கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொடிக்கம்பம் விவகாரம் தொடர்பான வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.


Next Story