12 மணி நேர வேலை மசோதா யாருக்கு பொருந்தும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்


தினத்தந்தி 21 April 2023 11:04 AM GMT (Updated: 22 April 2023 3:09 AM GMT)

12 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றால், அதற்கேற்ற வசதிகள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் இருந்தால் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை,

தமிழ்நாட்டுக்கு வரும் நிறுவனங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டசபை வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தொழிலாளர்களிடமோ, தொழிற்சங்கங்களிடமோ கருத்துகேட்பு கூட்டம் நடத்தினீர்களா? 12 மணி நேர வேலை சட்டத்திருத்த மசோதா தொழிலாளர் விரோதமானது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகின்றனவே?

பதில்:- இது தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்திருத்தம் அல்ல. எந்த ஒரு தொழிலாளரின் விருப்பத்துக்கு மாறாகவோ, எதிர்ப்பாகவோ கொண்டுவரப்படக்கூடிய சட்டத்திருத்தம் அல்ல. தொடர்ந்து வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே பணி நீடிக்கும். இருக்கிற வரைமுறைகள், நிலைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. விரும்பும் நிறுவனங்கள் மட்டுமே செய்யலாம். அதுவும் அரசாங்கம் பரிசீலனை செய்துதான் இதை நிறைவேற்றுமே தவிர, எல்லா நிறுவனங்களுக்கும் இந்த முறையை நடைமுறைப்படுத்தாது.

கேள்வி: தனியார் கம்பெனிகள் தொழிலாளர்களை வற்புறுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும் அல்லவா?

பதில்: இல்லை. அதுமாதிரி இல்லை. எந்த ஒரு தொழிலாளரின் எதிர்ப்பை மீறியோ, கட்டாயப்படுத்தியோ நிச்சயமாக இது நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. எந்த நிறுவனம், தொழிற்சாலை விரும்புகிறதோ அந்த தொழிற்சாலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறுதான் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: நீங்கள் தெளிவாக சொல்லியும்கூட ஏன் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன?

பதில்:- ஏன் வெளிநடப்பு செய்தார்கள் என்று நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். இப்போது கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த 25 (ஏ) சட்டத்திருத்தம் என்பது பொதுவாக இன்றைக்கு இருக்கக்கூடிய உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் வருகிறபோது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகிறபோது தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய நிறுவனங்கள் இங்கே நம்முடைய வேலை நேரங்களில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.

இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக, குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சொன்னதைப்போல, எல்லா நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல என நான் தெளிவுபடுத்துகிறேன்.

குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருத்தமாக அமையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, மின்னணுவியல் துறை நிறுவனங்கள் போன்றவை. அங்கு 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் அல்லது வேறு பணிகளை அவர்கள் பார்க்கலாம்.

கேள்வி: தனியார் நிறுவனங்களில் 4 நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்ற சட்டத்தை கொண்டுவரும்போது இந்த தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரைக்கும் அதிகளவில் வேலை செய்யவேண்டும் என்பதற்காக 5-வது நாளோ அல்லது 6-வது நாளோ...

பதில்: அது கிடையாது. ஏற்கனவே இதில் என்ன சட்டங்கள் இருக்கிறதோ அதை மாற்ற முடியாது.

கேள்வி: வரச்சொல்லி கட்டாயப்படுத்தினால்...?

பதில்: கட்டாயமே படுத்தக்கூடாது. வேலை செய்யக்கூடியவர்கள் தன்னார்வமாக ஒப்புக்கொண்டு வருவதற்கு விரும்பினால், வரலாம்.

கேள்வி: உதாரணத்துக்கு, நான் தனியார் நிறுவனத்தில் 4 நாட்களுக்கு வேலை பார்ப்பதற்கு விரும்புகிறேன் என்றால், இல்லை 6 நாட்களுக்கு வேலைக்கு வரவேண்டும் என்று சொன்னால்…

பதில்: நம்மைப் பொறுத்தவரையில், நம்முடைய கொள்கைகளின் அடிப்படையில் இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு என்று பிரத்யேகமான சில கொள்கைகளின் அடிப்படையில்தான் இது வந்திருக்கிறது. எனவே அது பொருந்தாது.

கேள்வி: மீதி இருக்கிற அந்த 3 நாட்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுமுறை தானே?

பதில்: ஆமாம். சம்பளத்துடன்கூடிய விடுமுறைதான்.

கேள்வி: அந்த நாட்களில் வேலைக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தினால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: இப்போது இருக்கக்கூடிய சட்டங்களிலேயேகூட, கட்டாயப்படுத்தினால் என்ன நடைமுறை பின்பற்றப்படுமோ, அந்த நடைமுறைகள் பின்பற்றப்படும்.

கேள்வி: எந்த ஒரு தொழிலாளியையும் கேட்டு ஒரு நிறுவனம் இந்த முடிவுக்கு வரப்போவதில்லை. அந்த நிறுவனமே செய்யும்போது தொழிலாளர் விரோதப் போக்கு…

பதில்: தொழிலாளர் விரோதப் போக்கே கிடையாது. காரணம் என்னவென்றால், ஒரு தொழிலாளிக்கு அந்த நெகிழ்வுத்தன்மையாக அவருடைய வேலை நேரத்தை நிர்ணயித்துக்கொள்ள முடியும் என்ற வாய்ப்பை இது வழங்கியிருக்கிறது. அவருடைய ஒட்டுமொத்த வேலைநேரத்திலோ, அவர்கள் கொடுக்கக்கூடிய பயன்களிலோ எந்தவித மாற்றமும் கிடையாது. எனவே, இந்த அரசு, முதல்-அமைச்சர் தெளிவாக இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன், தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமையை எந்த காலத்திலும் பறிக்கக்கூடிய எந்த முயற்சியும் இந்த அரசுக்கு கிடையாது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story