சூறையாடப்பட்ட பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த TNPSC selection மையம் வேறு பள்ளிக்கு இடமாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


சூறையாடப்பட்ட பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  TNPSC selection மையம் வேறு பள்ளிக்கு இடமாற்றம்  கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x

சூறையாடப்பட்ட பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையம் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


இதுகுறித்து அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப்- 4) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த தேர்வினை கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தாலுகாக்களை மையமாக கொண்டு 143 தேர்வு மையங்களில் மொத்தம் 42,600 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத 1,200 தேர்வர்களுக்கு தேர்வாணையத்தால் பட்டியல் இறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறந்ததையடுத்து ஏற்பட்ட சட்டம்- ஒழுங்கு பிரச்சினையின் காரணமாக அம்மையத்தில் தேர்வு நடத்துவதற்கான சூழல் இல்லை.

மாற்று மையம் ஒதுக்கீடு

இதனால் 1,200 தேர்வர்களுக்கு மட்டும் மாற்று இடமாக கள்ளக்குறிச்சி நீலமங்கலத்தில் உள்ள ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 900 தேர்வர்களும் மற்றும் ஏ.கே.டி. நினைவு வித்யா சாகத் பள்ளியில் (சி.பி.எஸ்.சி.) 300 தேர்வர்களும் தேர்வு எழுத தேர்வறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்வாணையத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

எனவே தேர்வு எழுத வரும் நபர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். தேர்வு எழுத வருபவர்கள் காலை 9 மணிக்கு மேல் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கூடத்திற்குள் செல்போன் மற்றும் எந்த வகையான மின்னணு சாதனங்களையும் கொண்டு வர அனுமதி இல்லை.

கருப்பு பந்துமுனை பேனாவினால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். தேர்வுக்கூட அனுமதி சீட்டினை தவறாமல் கொண்டு வர வேண்டும். தேர்வு எழுத வருபவர்கள், அரசின் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story